தேர்தலை அசை போட்டபடி

தேர்தலை அசை போட்டதில்:

1. மக்கள் மறந்த விஷயங்களில் (அல்லது மறக்கடிக்கப்பட்ட விஷயங்களில்) முக்கியமானதொன்று, இப்போது பெரிதாகிக் கொண்டிருக்கும் இலங்கை போரும், இங்கு திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் என்ற விவாதமும். இலங்கையில் கிட்டத்தட்ட முழு வீச்சில் போர் ஆரம்பிக்கப் போகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு என்ன ஆகும்? ராமேஸ்வரத்தில் ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் பிடிக்கப்பட்ட ஆயுதங்களைப் பற்றியும் திமுகவின் புலிகள் சார்பு பற்றியும் இன்னும் விவாதம் பெரிய அளவில் எதிரணியினர் தொடரவில்லை. (வை.கோவுக்கு புலிகள் தொடர்பு இருந்தாலும் அதிமுக ஆட்சியில் அவர் சொல்வது எதுவும் செல்லாது என்று தான் தோன்றுகிறது).

2. திமுகவினர் கூற்றுப்படி, மத்திய அமைச்சர்கள் அந்த காலத்து ராஜாக்கள் போல. டெல்லியில் உட்கார்ந்துக்கொண்டு ஏராளமான திட்டங்களையும் பணத்தையும் வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய கருணைப் பார்வை கிடைக்க வேண்டுமானால், மாநில முதல்வரும் அவர் அமைச்சரவையும் சென்று, மத்திய அமைச்சர்கள் புகழ் பாடி, அவர்களுக்கு கால் அமுக்கி விட்டு, தங்கள் மாநிலத் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்நாட்டிற்கு வரும் நலத்திட்டங்களை நாகாலாந்துக்கு அனுப்பி விடுவார் மத்திய அமைச்சர்.

3. "ஜனநாயக ஆட்சி வேண்டுமா சர்வாதிகார ஆட்சி வேண்டுமா" என்று கேட்கும் "ஜனநாயக" தி.மு.க.விலும் ராஜ்ய சபா எம்.பி பதவி என்று வரும் போது அதில் ஜனநாயகம் எல்லாம் கிடையாது. எம்.பி பதவி கலைஞருக்கு அன்று யார் மேல் பாசம் இருக்கிறதோ, அன்று எந்த பக்கம் காற்று அடிக்கிறதோ, அவருக்குத் தூக்கி கொடுக்கலாம். எம்.பி பதவிக்கு யாரும் "தகுதி" வாய்ந்தவர்கள் கிடையாது. அதனால் தான் "வை.கோவுக்கு எம்.பி பதவி கலைஞர் போட்ட பிச்சை", "ஒன்றுக்கும் லாயக்கில்லாத வை.கோவை எம்.பி ஆக்கி கலைஞர் அழகு படுத்திப் பார்த்தார்" என்றெல்லாம் சொல்கிறார்கள்.

4. திரும்பத் திரும்ப தயாநிதி மாறன், சன் டிவி, இலவச திட்டங்கள் இவற்றை சுற்றித் தான் விவாதங்கள் நடக்கின்றன. அன்புமணி தப்பித்துக்கொண்டு விட்டார். அவர் அமைச்சர் ஆனது பற்றியோ, பொதுவாக பா.ம.க பற்றியோ ஒரு பேச்சும் காணோம். ரேடாரின் கீழே தான் பறக்குது பா.ம.க (இங்கிலீஷில் யோசிச்சு தமிழில் எழுதினா இப்படித்தான்).

5. இந்த தேர்தலின் biggest non-factors ஒன்று பா.ஜ.க, இன்னொன்று மு.க.அழகிரி, மூன்றாவதாக டாக்டர் கிருஷ்ணசாமி.

6. ஆளும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர ஓட்டு கேட்பதும் "இலவச சைக்கிள் கொடுத்தேன், அதில் இலவசமாக காற்று அடித்துக் கொடுத்தேன்" என்றெல்லாம் தான். அதை முன்னரே புரிந்துகொண்டு, மேலும் மேலும் இலவசமாக வழங்குவோம் என்று தி.மு.க அறிவித்தது ஒரு மாஸ்டர்ஸ்ட்ரோக்.

7. கும்பகோணம் தீ விபத்து பற்றியும் அதற்குப்பின் பள்ளிக்கூடங்களில் ஏதாவது மாற்றங்களை தமிழக அரசு செய்ததா என்பதைப் பற்றியும் யாரும் பேசுவதாக தெரியவில்லை. இனி எந்த பள்ளிக்கூடத்திலும் தீ விபத்து நடந்தால் இத்தனை சிறுவர்கள் இறக்க மாட்டார்கள் என்று நம்பலாமா என்ன?

8. பாலாற்றின் மீது கட்டப்போகும் அணை பற்றி இரு அணியினரும் முதலில் பேசினர், இப்போது அதைப் பற்றி இருதரப்பினரும் ஒன்றும் கூறுவதாகத் தெரியவில்லை.

9. நதிகளை இணைக்கும் ப்ளான் என்ன ஆயிற்று? திமுகவின் மத்திய அமைச்சர்கள் அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? (குறைந்தபட்சம் ரஜினி ஒரு கோடி ரூபாய் கொடுத்தாரா இல்லையா? )

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories