அரசியலில் செல்வாக்கு பெறுவது எப்படி?

ஒன்றும் தேறாத உப்புமா கட்சி (ஒ.தே.உ.க)வை யாரும் கவனித்ததேயில்லை. அப்படி ஒரு கட்சி இருக்கிறது என்றோ அதன் உறுப்பினர்களிடையேயும் கோஷ்டி சண்டை இருக்கிறது என்றோ ஒரு பத்திரிகையும் எழுதியதில்லை. அவ்வப்போது காந்தி ஜெயந்தி, தேவர் ஜெயந்தி என்று அறிக்கைகள் விடுவார்கள், அதையும் யாரும் படித்ததில்லை. அப்படிப்பட்ட ஒ.தே.உ.க, ஒரே தேர்தலில் எல்லா பத்திரிகைகளும் எழுதும்படியாகவும், தேர்தலில் ஒரு "சக்தி"யாகவும் மாறியது (அல்லது மாறியதாக காண்பித்துக்கொண்டது) எப்படி?

முதலில் ஒரு நடிகர், நடிகர் பார்த்தியைக் கூப்பிட்டு ஒ.தே.உ.க-வின் மாநிலப் பொதுச்செயலாளராக நியமித்தார்கள். இந்த நடிகரின் தாத்தா, அந்த காலத்தில் ஊர் ஒன்றில் இட்லிக்கடை வைத்திருந்தாராம். அதனால், கான்வென்டில் படித்த பார்த்தி, தீடீரென்று தாத்தாவின் நினைவால் ஒ.தே.உ.கவில் சேர்ந்தார். இனிமேல் தன் வாழ்நாள் முழுவதும் தன் தாத்தா எப்படி இட்லி இட்லியாய் வெந்து உருகி சேவை செய்தாரோ, அதேபோல் தானும் வெந்து உருகி சேவை செய்யப்போகிறேன் என்றார். நடிகர் பார்த்தி ஒரு காலத்தில் நல்ல நடிகராக இருந்தார். அதற்குப் பின், அவர் பேசிய தமிழை உதித் நாராயண், சாதனா சர்கம் போன்றவர்கள் காப்பியடித்ததில் பார்த்திக்கு மார்க்கெட் காலியாயிற்று. சரி, மார்க்கெட் காலியானால் அரசியல் தானே. சேருவோம் என்று வந்துவிட்டார்.

ஒ.தே.உ.கவின் மத்திய தலைவர் சாட்டர்ஜி. அவர் யாரால் தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டார், அரசியலில் என்ன செய்திருக்கிறார் என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லாத விவரங்கள். சாட்டர்ஜிக்கோ சினிமாவும் தெரியாது. பார்த்தியை இழுக்கவேண்டுமே என்று ராத்திரி முழுவதும் பார்த்தி நடித்த படங்களைப் பார்த்துவிட்டு வந்து, அடுத்த நாள் பார்த்தியை பொதுச்செயலாளராக நியமித்து, பார்த்தி தனக்கு பிடித்த நடிகர் என்றும், "ஹிந்தி மே ஜீதேந்திரா, டமில் மே பார்த்திஜி" என்று ஐஸ் வைத்துப் பேசினார். சாட்டர்ஜி பார்த்த ஒரே ஹிந்தி படத்தில் ஜீதேந்திரா நடித்திருந்ததால் அதை வைத்து தோராயமாக சொல்லிவிட்டார். பதிலுக்கு பார்த்தியும், "தமிழ்நாட்டில் கருணாநிதி மாதிரி மிசோரமில் சாட்டர்ஜி" என்று வாழ்த்தினார். ஒ.தே.உ.க இனி தமிழ்நாட்டில் பார்த்திஜியின் மேற்பார்வையில் வளரும் என்றும், இதன் கொள்கைகள் என்னவென்று பார்த்திஜியின் ஊட்டி தோட்டத்தில் பேசப்போகிறோம் என்றும் சாட்டர்ஜி கூறினார். இதை மொத்தம் மூன்று பத்திரிகைகள் கவர் செய்தன. ஜூனியர் விகடன் "முன்னாள் நடிகரின் அரசியல் திடுக்" என்றும், ஹிந்து "A vernacular language actor joins unknown party" என்றும் எழுதின.

சரி, கட்சியில் நடிகரை சேர்த்தாயிற்று. இனி யாரோடு கூட்டணி வைப்பது? எதற்கு வம்பு என்று முதலில் கருணாநிதியையும், பிறகு ஜெயலலிதாவையும் பார்த்தார்கள் பார்த்தியும் சாட்டர்ஜியும். கருணாநிதி, "அரசியலை ஆட்டுவிக்க வந்த அறிவொளியே வா" என்று பாராட்டினாலும், இந்த தடவை கூட்டணி கிடையாது, என் இதயத்திலும் இடம் மிச்சம் இல்லை, வேண்டுமானால் அழகிரி இதயத்தில் இடம் தருகிறேன் என்று கூறிவிட்டார். இதனால் கோபமடைந்த பார்த்தி, நேரே போயஸ் கார்டனுக்கு சென்று அங்கே கொட்டும் மழையில் பத்து மணி நேரம் நின்றார். அதற்கப்புறம் தான் சொன்னார்கள், அன்று அம்மா போயஸ் கார்டனுக்கே வரப்போவதில்லை என்று. உடனே பத்திரிகைகளைக் கூட்டி, "ஒ.தே.உ.க அ.தி.மு.கவுடன் கூட்டணிக்காக காத்திருக்கிறது. உடனே வந்தால் சென்னை விநியோக உரிமை அவர்களுக்கு" என்று சினிமா ஞாபகத்தில் அறிக்கை விட்டார்.

இப்படி தினமும் ஒரு அறிக்கை விட்டு வந்தாலும் அ.தி.மு.க கண்டுகொள்ளாததால், வேறு வழி தெரியாத பார்த்தி, தனித்து போட்டியிடுவோம் என்று ஒரு அறிக்கை விட்டார். அதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்போது தான் அவருக்கு கிடைத்தது ஒரு பழைய புத்தகம். 'அரசியலில் செல்வாக்கு பெறுவது எப்படி' என்ற புத்தகம் தான் அது. அதைப் படித்து அதிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்துவிட்டுக்கொண்டு இருக்கிறார்.

முதலில், அரசியலில் தான் ஒரு சக்தி என்பதை காட்ட, மற்ற கட்சிகள் தன்னைக் கண்டு பயப்படுகிறார்கள் என்று அறிக்கை விடவேண்டும். அதற்குப்பின், மற்ற கட்சிகள் தன்னுடன் கூட்டணி வைத்துக்கொள்ளக் கூப்பிடுகிறார்கள் என்று உதார் விட வேண்டும். பார்த்தி, நிருபர்களைக் கூப்பிட்டு, "இதோ பாருங்க, இந்த மேஜை மேல தான் ஒரு கட்சிக்காரங்க எனக்கு 50 கோடி கொடுத்து என்னை ஓரங்கட்டிக்கோன்னு சொன்னாங்க. தங்கத் தமிழனான நான் அப்படி செய்வேனா? இந்தப் பணம் போதுமா என் கடனை அடைக்க? என் கடன் இதுக்கு மேல் 43.4 கோடின்னு அவங்களுக்குத் தெரியல்லை. அதனால் அந்தப் பணத்தை அப்படியே இடது கையால் ஒரு தட்டு தட்டிவிட்டேன்." என்றார். இந்த செய்தி எல்லா பத்திரிகைகளிலும் வந்துவிட்டது.

இதைப் படித்த கருணாநிதி, "50 கோடியே வேண்டாம்ன்னுட்டானே. அது இருந்தால் என் தொண்டர்களுக்கு மூன்று வேளைக்கு டீ வாங்கிக் கொடுக்கலாமே" என்று நினைத்தார். ஜெயலலிதாவோ, "இந்த 50 கோடி ரூபாய் எந்த பினாமியிடமிருந்து வந்தது? தோழியைக் கேட்க வேண்டும்" என்று நினைத்தார். இப்படியாக, ஒ.தே.உ.க மற்ற கட்சித் தலைவர்கள் கணக்கில் அடிபடத் தொடங்கியது.

திடீரென்று பார்த்தி நிருபர்களைக் கூப்பிட்டு, "என் கட்சிக்காரர்களை எல்லாம் ரொம்ப மிரட்டறாங்க. நான் என்ன பயந்தவனா? எத்தனை பேரை டூப் போட்டு அடிச்சிருக்கேன்? எனக்கு பயம் கிடையாது. என் ரத்தம் இங்கே தான் விழும். என் போராட்டம் நிற்காது" என்றெல்லாம் சொன்னார். பத்திரிகைகளும், ஒ.தே.உ.கவுக்கு பெரும் மிரட்டல் என்றும், அது தான் இந்த தேர்தலில் பெரிய சக்தியாக இருக்கும் என்றும் அதனால் தான் மிரட்டல் வருகின்றது என்று எழுதின. உப்புமா கட்சியை யார் மிரட்டுவார்கள் என்றெல்லாம் யாரும் யோசிக்கவில்லை.

பார்த்தி, தனது வேட்பாளர் ஒருவரை வாழைப்பழத் தோலில் விழ வைத்து, அதையும் அரசியலாக்கினார். "எங்களுக்கு வரும் மிரட்டலால் தான் என் கட்சிக்காரர் வாழைப்பழத் தோலில் விழுந்தார். நான் சொல்கிறேன், எத்தனை கொலை மிரட்டல்கள் வந்தாலும் எங்கள் கட்சியில் யாரும் விழ மாட்டார்கள். அப்படியே விழுந்தாலும் அதற்கு பயம் காரணம் இல்லை. ஆனால், என் மனைவிகள்.. மன்னிக்கவும், என் கட்சியில் இருப்பவர்களின் மனைவிகள் பயப்படுகிறார்கள். அதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்" என்றார். அரசியலில் செல்வாக்கு பெற, தன்னை மிரட்டுகிறார்கள், தான் ஒரு வளரும் சக்தி என்றெல்லாம் இப்படி அறிவித்துக்கொள்ள வேண்டும்.

இப்போதெல்லாம், பத்திரிகைகளில் அட்டைப்படமே பார்த்தி தான். கவர் ஸ்டோரியில் பூச்சியாரும் பருந்தாரும் ஒ.தே.உ.க பற்றித் தான் ஸ்கூப் அடிக்கிறார்கள். கட்சி "வளர்ந்துவிட்டது".

இன்னும் நிறைய சரக்கு இருக்கிறது அந்த புத்தகத்தில். உப்புமா கட்சி சார்பாக போட்டியிட்டால் தோற்பது உறுதியென்றால், பொது வேட்பாளராக போட்டியிட அடி போட வேண்டும், இன்னும் நிறைய விஷயங்கள். மேலும் பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று.

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories



9 comments: to “ அரசியலில் செல்வாக்கு பெறுவது எப்படி?