கருத்துக் கணிப்பு

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான கருத்துக் கணிப்பு வெளியிடப்படுகிறது. திமுக முன்னிலை, எழுபத்திமுணே முக்கால் சதவிகிதம் பேர் ஓட்டு போட்டால், விஜய்காந்த் ஜெயிப்பார்...ஆனால், அறுபத்தி இரண்டு சதவிகதம் பேர் தான் ஓட்டு போட்டார்கள் என்றால் சுயேச்சைகள் ஜெயிப்பார்கள் என்று அதிர்ச்சி வைத்தியம் தருகிறார்கள். இதுவரை பல தேர்தல்கள் பார்த்தாயிற்று, பல விதமான கருத்துக்கணிப்புகள், அலசல்கள் எல்லாம் பார்த்தாயிற்று....ஆனால், அவை நிஜத்தில் பிரதிபலிப்பது முப்பது சதவிகிதத்திலிருந்து முப்பத்தைந்து சதவிகிதம் வரை கூட சாத்தியமாவதில்லை (இந்த மாதிரி சதவிகிதம் எல்லாம் போட்டு ஒரு வரி எழுதினா, படிக்க ஜோராத் தானிருக்கு!) ! போன பாராளுமன்றத் தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி தான் அமையும் என்று பலரை நம்ப வைத்தக் கணிப்புகளும், அலசல்களும் ஏராளம் ஏராளம். அதுவும் குறிப்பாய் வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடத்தில் அந்த பிரமையும், பிராந்தியும், பீரும் நிறையவே இருந்தது. சொல்லப்போனால், எதற்காக ஒரு எலெக்ஷன் நடத்தி ஒளிரும் இந்தியாவை டல்லடிக்க வைக்க வேண்டுமென்ற ரீதியில் பலர் பேசுவதைக் கேட்டு, நானும் கூட 'வாஜ்பாய் ஜிந்தாபாத்' என்று தூக்கத்தில் அலறியிருக்கிறேன். ஆனால், நடந்தது என்ன...? அன்னை சோனியா வெண்ணையென வென்றார்! (தெரியும் ...வெண்ணையென வென்றார், கொஞ்சம் பிசுபிசுத்து சொதப்புதுன்னு...இருந்தாலும், அன்னை - வெண்ணை கொஞ்சம் ரிதமிக்கா இருக்கு இல்லை? )


சன் டிவி நடத்திய கருத்துக் கணிப்புகளில் ஒரு முறை கூட திமுக தோற்றதில்லை, லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்புகளில்
நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் முடிவுகள் வெளிவரத் தவறியதில்லை...இது போல 'நமது எம்.ஜி.ஆர்' நடத்திய கருத்துக் கணிப்புகளைப் பார்த்தால் (நான் படிச்சது இல்லை) அதிமுக தான் மெஜாரிட்டியாய் மெஜாரிட்டி பெற்றிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. ஒரு நூறு பேரிடம் பேட்டி எடுத்து விட்டு, இப்படித்தான் இருக்கும் என்று முடிவுகளை சொல்வது போன்ற ஒரு பேத்தல் வேறெதுவும் கிடையாது. முக்கால்வாசி சமயங்களில், கருத்துத் திணிப்புகள் தான் நடைபெறுகிறதேயொழிய கணிப்புகள் நடப்பதே இல்லை! கலர் டிவி, அரிசி, சீமைப் பசு (ரவளி இல்லை), பத்து ஏக்கர் நிலம், ஜில்ஜில் ஜிகிர் தண்டா என்ற அறிவிப்புகளுக்கெல்லாம் மயங்கிப் போகிற அளவுக்கு இப்போதைக்குத் தமிழ்நாடும், தமிழர்களும் இல்லை என்று தோன்றுகிறது. கிராமங்களில் வேண்டுமானால், இதன் பாதிப்புக் கொஞ்சமே கொஞ்சமிருக்கலாமொழிய...நகரங்களில் சீமைப் பசுவும், கலர் டிவியும் எந்த விதத்திலும் எடுபடப்போவதில்லை! அதே போல, சன் டிவியில் செய்யும் பிரச்சாரங்கள் பெரிய அளவில் மாறுதல்களை ஏற்படுத்துமென்று பலர் கணிக்கிறார்கள். சொல்லப்போனால், அது போன்ற பிரச்சாரங்கள் சலிப்பையும், வெறுப்பையும் கூட ஏற்படுத்தலாமென்ற உண்மையை மறுப்பதிற்கில்லை!


இது போன்ற கருத்துக் கணிப்புகள், ஒரு கையில் காபியை வைத்துக் கொண்டு, நாலு நண்பர்கள் கூடும் போது 'இவங்க ஜெயிச்சுடுவாங்களாமே - பார்த்தியா' என்று சுவாரஸ்யமாய் அரட்டை அடிக்க உதவுமே ஒழிய, நயாப் பைசாவுக்குப் பிரயோஜனமில்லை என்பது தான் எனது கருத்தும், கணிப்பும். படங்களின் டிரெயிலர்கள் சுவாரஸ்யங்களைக் கூட்டுவதற்கு மட்டுமே பயன்படும் - முப்பது செகண்டுகளுக்கும், மூன்று மணி நேரத்துக்கும் பெரிய வித்தியாசமிருக்கிறது - அது போன்றதொரு வித்தியாசத்தில் தான் கருத்துக் கணிப்புகளின் தலையெழுத்தும் பொறிக்கப்பட்டிருக்கிறது!- மைக்செட் முனுசாமி

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories7 comments: to “ கருத்துக் கணிப்பு