மைக் டெஸ்டிங்க - 1,2,3

(பொதுக்கூட்ட மேடைகளில் கழகப் பேச்சாளர்கள் எப்படிப் பேசுவார்கள் என்பதற்கான ஒரு எடுத்துக் காட்டு இது. இது மிக மிகக் காரம் குறைக்கப்படதொரு பேச்சு. இதில் நடுநடுவில், பல கெட்ட வார்த்தைகளைப் போட்டு, வாடா போடா, வாடி போடி எல்லாம் போட்டால்...அந்த எஃபெக்ட் கிடைக்கும். இதய பலவீனமாவர்கள், அரசியல் பேச்சுகளை இதற்கு முன் கேட்டிராதவர்கள்...தயவு செய்து புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம். இந்தப் பேச்சை, இது போன்றதொரு பேச்சுக்களின் மூலமாகவே வாழ்வை நடத்தி வரும் வெற்றிகொண்டான்,நன்னிலம் நடராஜன் மற்றும் தீப்பொறி ஆறுமுகத்துக்கு சமர்ப்பிக்கிறேன். இதுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்குங்கறதைப் பார்த்துட்டு, மைக் டெஸ்டிங்க் தொடரும்.)

'தமிழ்நாட்டு மக்கள் பொழுது போகாம இருக்கறதால தான், நெறைய புள்ளை பெத்துக்கறாங்க. அதுனால மக்கள் தொகையைக் குறைக்கறதுக்காகத் தான், இந்தக் கலர் டிவி அறிவிப்பே' - யாரு இப்படி சொல்றானு நெனைக்கிறீங்களா? ஆங்கில மணி கொடுத்தால், அந்தப் பக்கம் அதிகமா அடிக்கும் மணியான வீரமணி! சரி இப்போ, அவர் சொன்னதைக் கொஞ்சம் ஆராய்வோம். பொழுது போகாம இருந்தா, தமிழ்நாட்டுலே புள்ளை பெத்துக்கறாங்களா? அதாவது செய்யறதுக்கு எதுவும் வேலை இல்லாம இருந்தா, 'மேட்டர்' தான் தமிழ்நாட்டோட ஒரே பொழுதுபோக்கு! யோவ்...தமிழனை இதை விடக் கேவலமா எவனுமே சொன்னது இல்லைய்யா! ஏதோ தமிழ்நாட்டுலே இருக்கறவன் எல்லாம் டாக்டர் பிரகாஷ் ரேஞ்சுக்குப் பொண்ணுங்க மேலே விழுந்து பிராண்டுறவங்க மாதிரிப் பேசியிருக்காரு!

அப்படி டி.வி கொடுத்தா, மக்கள் தொகைக் கொறைஞ்சுடும்னா, என்னாத்துக்கு நிரோத்,காப்பர்-டீ லொட்டு லொஸ்கு எல்லாம்?! அது போக, இப்போ டிவிலே வர்ற நிகழ்ச்சியை எல்லாம் பார்த்தா, எவனாவது போர்த்திக்கிட்டு சும்மா படுக்க முடியுமா? பதினோரு மணிக்கு மேலே டிவிலே காட்டுற ஒவ்வொரு மசாலாவையும் பார்த்தா, ஒரு புள்ளையோட நிறுத்தணும்னு நினைச்சவன் கூட எக்ஸ்ட்ரா ஒண்ணு டிரை பண்ணுவானேன்யா! நீ மிட்நைட் மசலாங்கற பேருலே என்னா போடுறே? திராட்சைப் பழத்தைத் தொப்புள்ளே அடிக்கறது....டேய், இந்த இடத்துலே இந்தத் தொப்புளைப் பத்தி ஒண்ணு சொல்லியாகணும்! அது என்ன பிரஸ்டீஜ் பிரஷர் குக்கராடா?! உட்டா சூப்புலே ஆரம்பிச்சு கேசரி வரைக்கும் அங்கேயே கிண்டி எடுத்துடுவீங்க போல இருக்கே?! சினிமாக்காரன் தான்யா நாட்டையே கெடுக்குறான். இன்னைக்குக் கூட பாரு, இந்த கார்த்திக் பய என்னலாம் சொல்றான். ஒரு நாள் எழுந்தவுடனே 'நான் ஆண்டிப்பட்டிலே போட்டி போடுவேங்கறான்' இன்னொரு நாள் பார்த்தா...'சொல்ல முடியாது சஸ்பென்சு'ங்கறான்! தெரியாமத் தான் கேக்குறேன் , நீ நாட்டுக்கு சேவை பண்ண வந்தியா ...இல்லை அரசியல்ங்கற பேருலே சஸ்பென்ஸ் சினிமாவுக்குக் கதை எழுத வந்தியா?!

இது போக, கலைஞர் சொல்றாரு...பொது அறிவை வளர்க்கறதுக்காககத் தான் டிவி கொடுக்கறாராம்! மைடியர் பூதம், வேப்பிலைக்காரின்னு சீரியல் போட்டுட்டு...இதெல்லாம் பார்த்தா பொது அறிவு வளரும்னு நெனைக்குற ஒரே குடும்பம் கலைஞர் குடும்பம் தான்யா! இப்போ வர்ற சீரியல்லாம் பார்க்குறா மாதிரியா இருக்கு?! ஒருத்தன் செத்தா அவனுக்கு மூச்சு நின்னதுலேந்து, ராட்டி அடுக்கறது, பஞ்சை சொருகறதுன்னு ஏதோ எழவு வூட்டுல பண்ற சமாச்சாரத்தை நீட்டி முழக்கிக் காமிக்கறதுக்குப் பேரு சீரியலாடா?! வீரப்பன் செத்ததை விலாவரியாக் காமிச்சாக் கூடத் தான் கஷ்டமா இருக்கும்...அதுக்குன்னு அதை ஒக்கார்ந்து பார்க்க முடியுமா?!

இது எல்லாத்தையும் விடுங்கய்யா...இப்போ தமிழ்நாட்டுலே முக்கியமான பிரச்சினையா, காவிரிப் பிரச்சினை தெரியலை, வேலையில்லாததைப் பத்தி எவனுக்கும் கவலை இல்லை...மூவாயிரம் ரூபாக் கலர் டிவி கொடுத்து பொது அறிவை வளர்க்குறது தான் முக்கியமா படுது! சரி இந்த ஆளு தான், இப்படி டிவி அரிசின்னு பம்மாத்து பண்றார்னு பார்த்தா, அந்தாம்மாவும் பத்து கிலோ அரிசி இலவசம்னு சொல்லி மக்களை ஏமாத்துது! டேய்...தமிழ்நாட்டுலே ஏதாவது இலவசம்னு சொன்னா ஒடனே நம்பிடாதே...அவன் ஒன் பாக்கெட்லேந்து ஒரு பத்து ரூபா பணத்தை ஒனக்கே தெரியாம எடுத்து, 'சந்தோஷமா சாப்டு மாப்ளே'ன்னு சிங்கிள் டீ வாங்கிக் கொடுப்பான். அதுக்குப் பேரு தான்டா அரசியல்...அப்படிப் பண்றவன் தான் அரசியல்வாதி!

இந்த அம்மா என்னவோ தமிழ்நாட்டை சிங்கப்பூராக்கிட்டா மாதிரி, சாதனைகளைப் பத்தி மட்டும் தான் பேசுவாங்களாம்?! விவசாயி எல்லாம் எலி பிரியாணி தின்னது இந்த ஆட்சிலே தான்! அரசு அதிகாரி எல்லாம் லஞ்சம் கொடுத்தாக் கூட வெளியே வர முடியாம, ஜெயில்லே கிடந்தது இந்த ஆட்சிலே தான்! தினகரன்லேந்து ஜெயேந்திரர் வரைக்கும் கஞ்சா கேஸ் போட்டு, உள்ளே கெடந்தது இந்த ஆட்சிலே தான்! சங்கர மடத்துலே அந்த அய்யிரு மாட்டும் ஏதோ பண்ணிக்கிட்டு இருந்தாரு. நீயும் அப்பப்போ உன்னொட பிரெண்டோட போய், பிரசாதம்னு சொல்லிட்டு கறுக் முறுக்னு கல்கண்டை சாப்புட்டுக்கிட்டு இருந்தே. நீ என்ன பணத்தைக் கொடுத்தியோ...இல்லை அந்தாளு என்னாத்தை சப்புக்கொட்டிக்கிட்டு வாங்கி, ஜோல்னாப் பையிலோ போட்டுக்கிட்டாரோ, ஒங்களுக்குள்ளே என்ன பிரச்சினையோ...திடீர்னு கொலைக்கேசு போட்டு உள்ளே தள்ளிட்டே! சரி உள்ளே தள்ளினதோட வுட்டியா, 'அந்தாளு இனிமே தமிழ்நாட்டு பக்கமே வரக்கூடாதுங்கற' மாதிரி என்னன்ன வேலை பண்ணினே?! கோடிக்கோடியா கொள்ளை அடிச்சவன்லேந்து, கொத்துக் கொத்தா கொலை பண்ண வரைக்கும் ஒங்க கூடவே இருக்க, சாமியாருங்களை உள்ளே தள்றது தான் ஒங்க ஆட்சியோட ஒரே சாதனை! சாமியையே நம்பாத கருணாநிதியைக் கூட, சாமியாருக்கு சப்போர்ட்டா பேச வெச்சது அதோட கிளை சாதனைன்னு வேணா சொல்லலாம்!

கொலை பண்ணான் கொலை பண்ணான்னு சொல்றீங்களே? தருமபுரிலே மூணு மாணவிகளை எரிச்சீங்களே அது கொலை இல்லியா? அய்யரும் அய்யரும் அடிச்சுக்கிட்டு செத்துப் போனது எல்லாம் அநியாயமா தெரியுற ஒங்களுக்கு, மூணு கல்லூரிப்பொண்ணுங்களை எரிச்சாங்களே ஒங்கக் கட்சிக்காரங்க...அதெல்லாம் அநியாயமா தெரியலையா?! நீங்க என்ன மதர் தெரஸாவோட மறு உருவமா? ஒங்களை ஜெயில்லே போடக்கூடாதா? ஜெயில்லே போட்டதுக்கு ஒன் கட்சிக்காரன் மூணு சின்னப் பொண்ணுங்களை எரிச்சானே, அந்தக் கேஸை துரிதப்படுத்தறதுக்கு இது வரைக்கும் ஒங்க அரசாங்கம் என்ன பண்ணியிருக்கு?!

இப்போ புதுசா ஒருத்தர் அரசியல்லே வந்துருக்காரு. கதர் வேட்டி, கதர் சட்டை கொடுத்து, கையிலே ஒரு மலபார் பீடியும், மல்லிகைப்பூவையும் கொடுத்தா...அக்மார்க் வில்லன் மாதிரி இருப்பாரு இந்த ஆளு. இந்த தயாநிதியை தான் சொல்றேன். தாத்தா இருக்கற தைரியத்துலே, டாடாவை மிரட்டுறாம் இவரு! டேய்...இந்த ஸ்டாலினாவாது பரவாயில்லை. ஜெயிலுக்குப் போயிருக்காரு, நாலஞ்சு தடவை லத்தி சார்ஜ் வாங்கியிருக்காரு...அட, எதுக்காகவோ வாங்கினாரு, அந்தக் கருமம் நமக்கு எதுக்கு? இந்த தயாநிதிக்கு அரசியல்லே என்ன தெரியும்னு சொய்ங்க்னு போய் டெல்லிலே கோட் சூட் போட்டுக்கிட்டு அலையுறாரு! மாறனுக்குப் புள்ளைங்கறதைத் தவிர, இந்தாளு அரசியல்லே எதுனாச்சும் பண்ணியிருக்குறாரா? இந்தத் தேர்தல்லே இந்த அம்மா ஒரு வேளை ஜெயிச்சுதுன்னா, மொத ஆப்பு ஒங்க சன் டிவிக்கு தாண்டி! இப்போ செல்வி டாட்டா காமிச்சாச்சு...அடுத்தது விசுவும் டவலோட அம்மா கிட்டே வந்தாச்சு. இன்னும் பெப்ஸி உமாவும், பனைமட்டையிலே ஒண்ணுக்கு அடிக்கறா மாதிரி சலசலன்னு பேசுவானே...அந்த விஜயசாரதியும் மட்டும் தான் பாக்கி! அவங்களும் அம்மா சைடு வந்துட்டாங்கன்னா...ஒங்க தாத்தாவை நடுவுலே ஒக்கார வெச்சு, கவியரங்கம் நடத்தறதைத் தவிர வேற புரொக்ராமே உங்க டிவிலே வர முடியாது! அதுக்கு ஒரு வழி பண்ணாம அந்த அம்மா உடாது!

சொல்லப்போனா, ஒங்க ரெண்டு கழக சண்டைக்குப் பஞ்சாயத்து பண்றது தானே, தமிழ்நாடோட கடந்த முப்பது ஆண்டு கால அரசியலே! டேய்...இப்படியேப்போனா தமிழ்நாடு
வெளங்குமாடா?!

(நடுவுலே டேய் டேய்னு ஏக வசனத்துலே கூப்புடுறது ஒங்களைத் தான், ஹி...ஹி...அது தாங்க இந்த பேச்சோட ஸ்டைலே :) )


- மைக்செட் முனுசாமி

Links to this post

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories8 comments: to “ மைக் டெஸ்டிங்க - 1,2,3